புதன், 7 ஆகஸ்ட், 2013

மொட்டக்கடுதாசி


மொட்டக்கடுதாசி –இலக்கியச்செம்மல் வெளங்காதவன்
மோகி,
நாந்தேன்! 

நேத்துப் பாத்தேன், நம்ம ஊரு வாயக்காலிலே துணி தொவைக்கும்போது. ஒரு வாரமா மாமன் ஊருக்குப் போயிருந்தியா? கொஞ்சம் எளச்சு வந்திருக்க. ஏன் அங்க சோறுகீறு எதுவும் போடலியா? உன் அப்பத்தா நேத்து உன் மாமனார், அதேன் நம்ம வீட்டுக்கு வந்திருந்துச்சு. உங்க வீட்ல கோழிக் கறியாம். டீக்கடை ராமசாமி வூட்டு நாயி கடிச்சதுல இருந்து, கோழி திங்கிறது இல்லியாம். ஒண்ணா ஒக்காந்து கொழுக்கட்டை சாப்புட்டம்.

நாஞ்சொன்னேன் பாத்தியா? தங்கவேலு அவனோட வீட்ட நமக்கு விக்கமாட்டானாம். என்னமோ போ. இப்போ ஏதோ புதுசா கிரீமு வந்திருக்காம்; இனிமே பேரன் லவ்லி போடாத.ஆவணி மாசம் எல்லாருஞ்சேந்து மாகாளியம்மன் கோயிலு கும்பாவுஷேகம் வச்சிருக்காங்களாம். நேத்து மாரீப்பன் சொன்னான்.

ஊருல இருந்து ஏதாச்சும் வாங்கியாந்தியா? நீ சொன்னமாரியே பீடி குடிக்கறத உட்டுட்டேன். நம்ம செவலை மாட்டுக்கு பால் வத்திப்போயிருச்சு. இனிமே, மொண்டி அப்பிச்சி மாட்டுப்பால் தான் வாங்கோணும். தெண்டபாணி மாமன் சீட்டு ஆரம்பிச்சு இருக்காம். அம்மா சொல்லுச்சு. எங்கபோயி மாசம் ரெண்டாயிரம் குடுக்கறது?

செரி வுடு. எல்லாஞ்சரியாடும். 

உங்க அப்பங்கிட்ட எப்ப வந்து பொண்ணுக் கேக்கட்டும்? பல்லடத்துல இருந்து ஜாதகம் கேட்டு வந்தாங்களாம். மூணு ஏக்கரா காடு வச்சிருக்குற எனக்கு உங்க அப்பன் பொண்ணுக் குடுப்பானான்னு தெரியல. அதுனால, வெகுசீக்கிரமா சொல்லி அனுப்பு.

கலியாணச் செலவுக்கு காளைய விக்கோணும். அக்காளுக்கு சீலை துணிமணி எடுக்கோணும். ஒரு பவுனு இருவதாயிரம். ஆறு பவுனும் எடுக்கோணும். காட்டுப் பத்திரத்த வச்சனாலும் நான் ஏற்பாடு பண்ணுறேன்.

உனக்கு எத்தினி சீலை எடுக்குறது? நானு ஒரு சீலை எடுத்தேன். அம்மா அதப் பாத்திடுச்சு. “உனக்குத்தான்மா” ன்னு குடுத்துட்டேன். இதெல்லாம் பத்தாதுன்னு ராமண்ணங்கிட்ட சொல்லி ரெண்டு சீலை எடுத்திருச்சு. வாரம் எறநூறு ரூவா மூணு மாசம் கொடுக்கோணும்.

நாளைக்கு உன்னை மாரியாத்தா கோயில்ல பாக்குறேன்.

இதையப் படிச்சுட்டு, எப்பப் பொண்ணுப்பாக்க வரட்டும்னு பதில் கடுதாசி கொடுக்கவும். நாளைக்கு உங்க அப்பத்தா கூட வந்தாப் பேச முடியாது.

எதுக்கும், இந்தக் கடுதாசியக் கொண்டுவரும் பொடுசுகிட்ட, ஆயிரம் ரூவா குடுத்துவிடவும். காளைகளுக்கு தவுடு வாங்கோணும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக